search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு போலீசார்"

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி டாஸ்மாக் கடையில் சாக்காங்குடியை சேர்ந்த மோகன்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராகவும், வளையமாதேவியைச்சேர்ந்த வீரமணி(41) என்பவர் உள்பட 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்க்கிறார்கள்.

    இதில் விற்பனையாளர் வீரமணி பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மோகன் புகார் கடிதம் எழுதி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வீரமணியை இடமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு வீரமணியிடம் மேற்பார்வையாளர் மோகன் கேட்டுள்ளார்.

    இது பற்றி வீரமணி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மோகன் வீரமணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின், இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதன்பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சி அதிகாரியின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் பணம் சிக்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நேற்று இரவும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் மாடசாமி (வயது 48) திடீரென தனது காரில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது காரை சோதனை செய்தனர். காரில் 3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. காரில் இருந்த பை ஒன்றை சோதனை செய்தபோது அதில், ரூ.39 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மாடசாமி சுந்தரராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களையும் காட்டவில்லை.

    நள்ளிரவு 1.30 மணி வரை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு அடுத்த விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று கூறி மாடசாமி சுந்தரராஜை அனுப்பி வைத்தனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மாடசாமி சுந்தரராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணார்ப்பேட்டை ஆகும். தினமும் ஊரில் இருந்து தான் பணிக்கு வந்து சென்றுள்ளார்.

    மாடசாமி சுந்தரராஜிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது. அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போதுசெயல் அலுவலர் மேஜை டிராயரில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    கோடிக்கணக்கில் முறைகேடு புகாரின் பேரில் சென்னையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #VigilanceDepartment #Raid
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார். இந்த பயிற்சி மையத்தின் செயல்பாட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    பள்ளி மாணவர்களுக்காக இந்த பயிற்சி மையம் சார்பில் மாதஇதழ் நடத்தப்படுகிறது. அந்த மாத இதழுக்காக அரசு ஒதுக்கிய நிதியிலும், உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் கல்வியியல் பாடத்திட்டம் குறித்து நடத்தப்படும் வல்லுனர்குழு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தாமல், நடத்தியதாக கணக்கு காட்டி அதிலும் முறைகேடு நடந்ததாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு அடிப்படையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அறிவொளியின் அலுவலகத்திலும், கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் ஒரேநேரத்தில் நேற்று காலை 10 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் வசிக்கும் வீடு 3 அடுக்குமாடி குடியிருப்பாகும். கீழ்தளத்தில் அறிவொளி வசிக்கிறார்.

    இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதையொட்டி அறிவொளியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அறிவொளியின் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் அறிவொளியின் அனுமதியோடு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அறிவொளியோடு, மாநில முறைசாரா கல்வித்துறை இயக்குனர் ஆர்.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியை சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை சித்ரா, சேலம் மாவட்டம் எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட 2 இதழ்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ‘உலகெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்துக்காக 5 வீடியோ படங்கள் தயாரிக்க ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்வி செயற்கை கோள் வாங்கியதிலும் ரூ.2 கோடி சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேற்கண்ட தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. #VigilanceDepartment #Raid

    ராயபுரம் மற்றும் திருவண்ணாமலை பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #vigilanceraid

    ராயபுரம்:

    ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு மற்றும் கம்பெனி பதிவு ஆகியவற்றுக்காக தினமும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

    இதனால் இந்த அலவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. கந்தசாமி தலைமையில் 20 பேர் கொண்ட போலீசார் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களை வெளியில் செல்லவிடாமல் அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தினார்கள்.

    பீரோ, மேஜை என ஒவ்வொரு இடத்திலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றவர்கள் இரவுவரை வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு பொதுமக்களை மட்டும் அலுவலகத்தில் இருந்து போலீசார் வெளியே அனுப்பினார்கள்.

    இச்சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

     


    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

    பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்திரப்பதிவு இணை பதிவாளர் உள்பட அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் பத்திரம் பதிவுக்காக வந்தவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களை அப்படியே உள்ளேயே வைத்து கதவை பூட்டிக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நீலகண்டன் பணியாற்றி வருகிறார். இவர், டாஸ்மாக் பார்களில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். மாலையில் இருந்து இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    மேலும் டிரைவர் சுரேஷ் மற்றும் மதுவிலக்கு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றனர். #vigilanceraid

    மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வளசரவாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அய்யப்பன்.

    அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்க துரையிடம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தங்கதுரை பலமுறை இன்ஸ்பெக்டரை சந்தித்து தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார்.

    ஆனால் இன்ஸ்பெக்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி என்ஜினீயர் தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி இன்று காலை என்ஜினீயர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கைது செய்தனர்.

    போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதால், அதை தடுக்க இ-செல்லான் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இருக்கும் வேளையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை:

    தீபாவளி நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பரிசு பொருட்கள், இனிப்புகள், பட்டாசு உள்ளிட்டவைகளை இனாமாக வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று அதிகாரிகள் பெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை மாநகராட்சி அலுவலகத்திலும் உயர் அதிகாரிகள் தீபாவளி பரிசு பொருட்கள் பெருவதாக கிடைத்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 20 போலீசார் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள நகர பொறியாளர் அறைக்கு பல ஒப்பந்ததாரர்கள் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகர பொறியாளர் அறைக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து நகர பொறியாளர் அரசு மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சம் ரொக்கம், தலா 10 கிராம எடை கொண்ட 12 வெள்ளி காசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், 2 வெள்ளி டம்ளர், பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சுமார் 3 மணி நேரம் அதிகாரி அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதிகாரியிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நகர பொறியாளர் அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக அதிகாரி அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஒரு சஸ்பெண்டு அதிகாரி பின்புலமாக இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    நேற்று காலை முதல் மாலை வரை நகர பொறியாளர் அரசு மாநகராட்சி பணிகளில் ஈடுபட்டார். சரியாக 7.30 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஏற்கனவே இதே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்படதாகவும் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #Vigilance

    வேலூர்:

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேரிடம், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பள நிலுவை தொகையில் கமி‌ஷன் கேட்டுள்ளார்.

    அதற்கான கமி‌ஷனை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் வசூல் செய்து நேற்று முன்தினம் பொது மேலாளர் அலுவலகத்தில் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முரளிபிரசாத் காரில் இருந்த ரூ.11 லட்சம், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், அருகில் தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சம் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முரளிபிரசாத்தை சென்னை ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். #Vigilance

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் கொதிகலன் (பாய்லர்) இயக்குனரக அலுவலகம் உள்ளது.

    இங்கு கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது கொதிகலன் இயக்குனரான சக்திவேல் என்பவரது காரில் இருந்து ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் சிக்கியது. மேலும் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்தும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதே அலுவலகத்தில் துணை இயக்குனராக இருக்கும் சிவகுமாரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.15 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. அலுவலக பணியாளர் ஒருவரிடமிருந்து ரூ.3500 சிக்கியது. இந்த 2 சோதனைகளிலும் மொத்தம் ரூ.3½ லட்சம் பணம் பிடிபட்டது. தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கொதிகலன்கள் பயன்படுத்தக் கூடிய திறனுடன் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் பணியையே கொதிகலன் இயக்குனர் அலுவலகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் தொழில் நிறுவனங்களிடமிருந்து மாமூலாக இந்த பணம் பெறப்பட்டிருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி இருக்கும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கியின் 6-வது லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 55). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 11-ந் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிலையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.30 லட்சம், தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர்.

    பாபுவின் வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனையிட்டனர்.

    அதில் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள்இருந்தன. பின்பு அவற்றை மதிப்பீடு செய்து மீண்டும் லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர். பின்பு அங்கு பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தார்கள். அதில் 500 கிராம் தங்க நகைகள் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன.

    இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்பு நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கியிலும் பாபுவின் பெயரில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரிலும் கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 போலீசார் கடலூர் வந்தனர். பின்பு அவர்கள் அந்த வங்கிக்கு சென்று பாபுவின் பெயரில் உள்ள 6-வது லாக்கரை திறந்து சோதனை செய்தனர். அதிலும் தங்க நகைகளும், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாபுவின் பெயரில் கோடிக் கணக்கான சொத்துக்கள் கடலூர், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடலூரில் 6 இடங்களில் வீடுகள் உள்ளன.

    மேலும் அவர் பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #RTO #DVACRaid

    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் மேலும் 3 லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    விழுப்புரம்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரை சேர்ந்தவர் பாபு (வயது55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக் குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு வசித்து வந்த கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். இதேபோல் அவரது உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில் வங்கிகளில் பாபு வைத்துள்ள லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதையொட்டி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் போலீசார் கடந்த 19-ந் தேதி திடீரென்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த லாக்கரை திறந்தனர்.

    அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன. அதன் பின்பு அவர்கள் கட லூர் பாரதி சாலையில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அங்கு பாபு பெயரில் இருந்த 2 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் அதிகமாக இருந்தன.

    மொத்தம் 3 லாக்கர்களிலும் 11 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. ஆய்வு செய்த பின்னர் அந்த நகைகளை மீண்டும் அதே லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாபு பெயரில் கடலூர் செம்மண்டத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலும் 3 லாக்கர்கள் இருப்பது தெரியவந்தது. அந்த லாக்கர்களிலும் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலத்தில் உள்ள அந்த வங்கிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அங்கு பாபு பெயரில் இருந்த 3 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து அந்த லாக்கர்களில் எவ்வளவு நகைகள் உள்ளது என்று மதிப்பீடு செய்து வருகின்றனர். #RTO #DVACRaid

    வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை அடுத்து துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் துணை இயக்குனர் சுப்பிரமணியன் வள்ளலார் டபுள்ரோடு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனியாக அலுவலகம் நடத்தியது தொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் மனு அளித்துள்ளனர். #Vijayabaskar #DMK
    ஆலந்தூர்:

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    ஆனால் சோதனை நடந்த பிறகு இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி.மு.க. வக்கீல்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் முத்துகுமார், நீலகண்டன் ஆகியோர் இன்று பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரி ஜெயந்த் முரளியை சந்தித்து மனு அளித்தனர். அவர் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் சீட்டை அளித்தார்.

    இதுபற்றி வக்கீல்கள் முத்துக்குமார், நீலகண்டன் கூறுகையில், ‘‘வருமான வரித்துறை அளித்த பரிந்துரைப் படி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்’’ என்றனர். #Vijayabaskar
    ×